சாட்சி | 72 | கவிதை
மாந்தருக்கு சாட்சி உள்ளம்
கண்ணுக்கு சாட்சி இமை
குருதிக்கு சாட்சி நாளம்
சிந்தைக்கு சாட்சி செயல்
என்பர்!
குழந்தை உருவாவதும் சாட்சியே
குழந்தை பிறப்பதும் சாட்சியே
பள்ளியில் சேர்க்கும்போதும் சாட்சியே
வேலை தேடும்போதும் சாட்சியே
திருமணவரம் தேடும்போதும் சாட்சியே
மணப்பந்தலின் போதும் சாட்சியே
புதுமனை அமைக்கும்போதும் சாட்சியே
மனிதன் உயரும்போதும் சாட்சியே
சாட்சியில்லாதது நூலில்லா பட்டம் போன்றது
வாசமில்லா மலர் போன்றது
உருவமில்லா முகம் போன்றது
பேரில்லா நகர் போன்றது
உறவில் இணைந்து வாழ்வதற்கும்
நட்பில் பிரியாது பழகுவதற்கும்
பணியில் நிம்மதி பெறுவதற்கும்
நேர்த்தி பாதையில் செல்வதற்கும்
மனசாட்சியே!
மனம் தூய்மையாக வைப்பதற்கும்
சொல் தெளிவாக பேசுவதற்கும்
செயல் செம்மையாக நடப்பதற்கும்
பண்பு பெருந்தன்மை இருப்பதற்கும்
மனசாட்சியே!
மனசாட்சி இல்லாத மனிதன்
உயிரற்ற மரப்பொம்மை
மனசாட்சி இல்லாத மனிதன்
முள்ளில்லா கடிகாரம்
மனசாட்சி இல்லத மனிதன்
பார்வையில்லா கருமணி ஆகும்!
குற்றமில்லா மனமும்
வேற்றுமையில்லா மனமும்
தலைகனமில்லா மனமும்
பொய்மையில்லா மனமும்
மனசாட்சி அமருமிடமே!
கருணையில்லா மனமும்
ஈகையில்லா மனமும்
ஒழுக்கமில்லா மனமும்
அன்பில்லா மனமும்
மனசாட்சி விலகுமிடமே!
மனசாட்சி கண்ணாடி போன்றது
ஒளிக்கீற்று போன்றது
மண்தன்மை போன்றது
மனசாட்சி குருதிதன்மை போன்றது
அழுதால் எதிரில் பிம்பமும் அழும்
சிரித்தால் எதிரில் பிம்பமும் சிரிக்கும்
நெல்லை விதைத்தால் நெல் விளையும்
கொள்ளை விதைத்தால் கொள் விளையும்
மனசாட்சி எண்ணத்தின் வாழ்வாகுமே!
ஜீவனத்திற்கு நாவினை விற்பதும்
பொருளாசைக்கு நாவினை திருப்புவதும்
உயர்விற்கு நாவினை நிறமாறுவதும்
இருமாப்புக்கு நாவினை பிறழவைப்பதும்
மனசாட்சி தடுமாற்றமே!
மனசாட்சி எண்ணத்தில் பதிப்போம்
மனநிறை பயணமாக பயணித்து
மகிழ்வோமாக....!
Comments
Post a Comment